பியோங்யாங்: அணு ஆயுத நாடு என்ற தனது அந்தஸ்தை எந்தவித வெளிப்புற அழுத்தத்தாலும் மாற்ற முடியாது என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.
ஈரான் தொடர்பான விவகாரங்களுக்குப் பிறகு, வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் மீது அமெரிக்கா தனது கவனத்தை திருப்பியுள்ளது. வடகொரியா அணு ஆயுத கையிருப்பைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்கா–தென்கொரியா இருதரப்பு அணுசக்தி ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும், வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வடகொரியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு தொடர்பான அறிக்கையை அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “போரில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பின் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமற்றது. எந்தவித வெளிப்புற அழுத்தங்களாலும் அணு ஆயுத நாடு என்ற வடகொரியாவின் அந்தஸ்தை ஒருபோதும் மாற்ற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், அணு ஆயுத திட்டத்தில் எந்த சமரசமும் செய்யப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை வடகொரியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
