நீஸ்: இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைத் தேர்வு செய்திருப்பது தங்களுக்கு மிகப்பெரிய கவுரவம் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான ஐந்து நாள் அரசுமுறை பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினரும், பிரான்ஸ் அரசின் உயரதிகாரிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மேக்ரான் பிரதமர் மோடியை கட்டித்தழுவியும், கைகுலுக்கியும் வரவேற்றார்.
பின்னர், இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ மாநாட்டை இரு நாட்டு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு முன்பாக பிரதமர் மோடி பல்வேறு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக நடைபெறும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ மாநாட்டை நீஸ் நகரில் தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாக தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் பிரான்ஸ்–இந்தியா புத்தாக்க ஆண்டை தொடங்கி வைத்ததை நினைவுகூர்ந்த அவர், இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குமா என்பது இனி கேள்வி அல்ல என்றும், இந்தியாவுடன் இணைந்து யார் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கப் போகிறார்கள் என்பதே உலகின் கவனமாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைத் தேர்ந்தெடுத்திருப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என அவர் கூறினார். இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் மோடியை பாராட்டிய மேக்ரான், சுதந்திர இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையை அவர் சமீபத்தில் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மோடியின் உறுதியான செயல்பாடுகள், இந்தியாவின் வலிமையையும் தலைமைத்துவத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
