சென்னை: புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில முக்கிய கீமோதெரபி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளின் உடல்நிலை மற்றும் நோயின் தன்மைக்கு ஏற்ப மாற்று மருந்துகளை பயன்படுத்துமாறு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் ஜீரண மண்டல புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கீமோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாக பல மருந்துகள் இணைந்து வழங்கப்படுகின்றன. இதில் பிளாட்டினத்தை அடிப்படையாகக் கொண்ட சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின் மற்றும் ஆக்சலிபிளாட்டின் போன்ற மருந்துகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
இந்த மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பிளாட்டினத்தின் விலை மற்றும் அதற்கான வரிகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் மருந்து மூலப்பொருள் இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வழக்கமாக ரூ.500க்குள் கிடைக்கும் சில கீமோதெரபி மருந்துகளின் விலை தற்போது இந்தியாவில் மூன்று முதல் ஐந்து மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கான மருந்துகளை மாநில மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்து வருகிறது. தற்போது சில மருந்துகளின் தட்டுப்பாடு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, நிலைமை சீராகும் வரை நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப மாற்று மருந்துகள் மற்றும் மாற்று சிகிச்சை முறைகளை பயன்படுத்துமாறு அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகள் கூறுகையில், புற்றுநோய் சிகிச்சைக்காக 400-க்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் மூன்று அல்லது நான்கு மருந்துகளின் விநியோகத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், சந்தையில் மருந்துகள் கிடைக்கும் பட்சத்தில் கூடுதல் விலைக்கு வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் சிகிச்சை பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் Dares Ahmed கூறுகையில், புற்றுநோய் மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மருந்து விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
