சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், விரைவில் பிரத்யேக மொபைல் செயலி மூலம் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் Arunraj தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘நோயாளிகள் அனுபவக் குழு’ அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.
இந்தக் குழு வாரந்தோறும் கூடி, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான வசதிகள், சுகாதார நிலை மற்றும் சேவை தரம் குறித்து ஆலோசித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தினசரி 3,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருவதால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதைத் தவிர்க்க தனியார் மருத்துவமனைகளில் உள்ளதைப் போன்ற முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தனியார் நிறுவனத்தின் மூலம் பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்பட உள்ளதாகவும், அந்த செயலியில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி காலை 8 மணி முதல் 9 மணி வரை முன்பதிவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக இந்த வசதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறினார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகள் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மின்தடை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற அவசர பிரச்னைகளை கையாள மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் மின்வாரியம் இணைந்து செயல்படும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
