வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை நேரடியாக மீறுவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பர்வதனேனி இதுகுறித்து பேசியபோது, ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழுமையான ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராணுவ வான்வழித் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் உயிரிழப்புகளையும் துயரங்களையும் ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார். எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச சட்டங்களின் கீழ் உள்ள கடமைகளை நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐநா பொதுச்செயலாளர் விடுத்துள்ள அழைப்பை இந்தியா ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.
இத்தகைய வன்முறைச் செயல்கள் ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான வெளிப்படையான தாக்குதலாக மட்டுமல்லாமல், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டம், ஐநா சாசனம் மற்றும் அரசு இறையாண்மை கொள்கைகளை வெளிப்படையாக மீறுவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 372 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 397 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் ரமலான் மாதத்தில் கொல்லப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் ஹரிஷ் பர்வதனேனி தெரிவித்தார்.
