சென்னை: திருவான்மியூர் – உத்தண்டி இடையே ரூ.2,100 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட நான்கு வழி மேம்பாலச் சாலை திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்ட மதிப்பீடு அதிகரிப்பு மற்றும் ஒப்பந்த நிறுவனம் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார்களே இந்த முடிவுக்குக் காரணமாக கூறப்படுகிறது.
சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையின் முக்கிய பகுதியாக உள்ள திருவான்மியூர் – அக்கரை சாலையில் நாள்தோறும் சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அதிகளவில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சாலையின் தற்போதைய வசதி போதாமையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திருவான்மியூரில் இருந்து 25 நிமிடங்களில் சென்றடைய வேண்டிய உத்தண்டியை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் ஆகும் நிலை நிலவி வருவதால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, திருவான்மியூர் ரயில் நிலையம் வழியாக வரும் வாகனங்கள் நேரடியாக உத்தண்டி வரை செல்லும் வகையில் 14.4 கிலோமீட்டர் நீள மேம்பாலச் சாலை அமைக்க கடந்த திமுக அரசு திட்டமிட்டது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்திற்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், திட்ட மதிப்பீடு தொகை செயற்கையாக உயர்த்தப்பட்டதாகவும், ஒப்பந்த நிறுவனம் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், திட்டத்திற்கான விரிவான அறிக்கை ரூ.52 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நில எடுப்பு, மின்கம்பங்கள், கேபிள்கள், குடிநீர் குழாய்கள் மற்றும் தொலைதொடர்பு வசதிகளை மாற்றுதல் உள்ளிட்ட செலவுகளும் மொத்த திட்ட மதிப்பீட்டில் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொதுத்துறை – தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ், 40 சதவீத நிதியை மாநில அரசும், 60 சதவீத நிதியை கட்டுமான நிறுவனமும் வழங்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பணிகள் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனத்தின் முதலீட்டை அரசு திருப்பிச் செலுத்தும் என்றும், அதன்பின் ஐந்து ஆண்டுகள் வரை சாலை பராமரிப்பு பொறுப்பை நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். திட்டம் ரத்து செய்யப்படுமா என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், அரசின் உயர் அதிகாரி ஒருவர், திட்ட மதிப்பீடு மற்றும் ஒப்பந்ததாரர் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் காரணமாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும், தேவையெனில் மறு டெண்டர் கோருவதா அல்லது திட்டத்தையே கைவிடுவதா என்பது குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
