பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர், 2021 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார். திமுக ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு நிலை தொடர்பாக தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்ததுடன், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மூலம் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைந்த நிலையில், 2025ஆம் ஆண்டு அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பிய தொகுதி ஒதுக்கப்படாததால் அவர் தேர்தலில் களமிறங்கவில்லை. எனினும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கட்சியின் சில முக்கிய தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை அண்ணாமலை தொடங்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், தில்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கான காரணங்கள் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையையும் அவர் சமர்ப்பித்ததாக கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அண்ணாமலை நேரில் சந்தித்து தனது முடிவுக்கான காரணங்களை விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை சமாதானப்படுத்த பாஜக தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என கூறப்படுகிறது.
புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் இன்று மதியம் 12 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், அண்ணாமலை அளித்த ராஜிநாமா கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் ஏற்றுக்கொண்டதாக கட்சித் தலைமையகம் அறிவித்துள்ளது.
