உலகின் முன்னணி நான்கு நாடுகளாக சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷியா திகழ்கின்றன என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் செய்தியாளர்களை சந்தித்த புதினிடம், இந்தியா – சீனா மற்றும் இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னைகளின் தன்மையை ரஷியா நன்கு அறிந்துள்ளதாக கூறினார்.
மேலும், பாகிஸ்தான் முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடு என தாம் கருதவில்லை என்றும், அது பல்வேறு நாடுகளுடன் உறவுகளைப் பேணும் பெரிய நாடு என்றும் குறிப்பிட்டார். அதேசமயம், உலகின் பல நாடுகள் தற்போது சீனாவுடன் தங்களது உறவுகளை விரிவுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்திலும், ரஷியா நான்காவது இடத்திலும் இருப்பதாக கூறிய புதின், சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷியா ஆகியவை உலகின் முதல் நான்கு நாடுகள் என குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவுகள் மிகவும் நுணுக்கமானவை என்றும், பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார். அந்த உறவுகளில் வெளிநாடுகள் தலையிடுவது பொருத்தமல்ல என்றும் கூறினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எல்லை விவகாரங்கள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்து வருவதாகவும் புதின் குறிப்பிட்டார்.
ரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் சீனாவை பாதிக்காது என்றும், அதேபோல் சீனாவுடனான உறவுகள் இந்தியாவை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா மற்றும் சீனத் தலைவர்கள் சந்திக்க வேண்டும் என தாம் முன்மொழிந்ததாகவும், அதன் மூலம் ரஷியா – இந்தியா – சீனா கூட்டமைப்பு உருவானதாகவும் கூறினார்.
இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட எந்த நாட்டுடனும் ஒத்துழைப்பதில் ரஷியாவுக்கு சிக்கல் இல்லை என்றும் புதின் தெரிவித்தார். குறிப்பாக, நவீன ஆயுத தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், பிரம்மோஸ் ஏவுகணை திட்டம் அதற்கான உதாரணம் என்றும் கூறினார்.
மேலும், சு-57 போர் விமான தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பின்னர் அதில் இணைவதாக இந்தியா தெரிவித்துள்ளதாகவும் புதின் குறிப்பிட்டார்.
