சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் கீர்த்தனா சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், புதிய நிறுவனங்களுக்கு விரைவான அனுமதி, ஒற்றைச் சாளர முறையிலான ஒப்புதல், முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக அமைச்சரிடம் மற்றும் முதல்வரிடம் கொண்டு செல்லும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கியிருந்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு அமைச்சகம், ஏஐ நகரம், ட்ரோன் வழித்தடங்கள், மின்சார வாகன உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் விண்வெளி பொருளாதாரம் போன்ற துறைகளில் மாநிலம் முழுவதும் வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் எழுந்தன. ஒரு தரப்பினர் முதலீட்டாளர்களை கவரும் புதிய அணுகுமுறை என பாராட்டிய நிலையில், மற்றொரு தரப்பினர் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிக்கு இந்த வகை விளம்பர வடிவம் பொருத்தமா என கேள்வி எழுப்பினர்.
இந்த சூழலில், ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சரான நாரா லோகேஷ், தனது சமூக வலைதள பதிவின் மூலம் அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், முதலீட்டாளர்களை நேரடியாக அணுகி மாநிலத்தை வணிக வளர்ச்சிக்குத் தயார்படுத்தும் முயற்சியை பாராட்டுவதாக கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என குறிப்பிட்ட அவர், “தேவையற்ற விமர்சனங்களை புறக்கணியுங்கள். ட்ரோல்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை; முதலீடுகள்தான் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.
