ராமநாதபுரம்: ராமேஸ்வரம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியை தொழிற்சங்கத்தினர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் சம்பவத்தால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராமேஸ்வரத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு இயக்கப்படும் ராமேஸ்வரம் – தாம்பரம் விரைவு ரயிலில் 4 ஏசி பெட்டிகள், 12 ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரயிலின் இரு முனைகளிலும் தலா இரண்டு பொதுப்பெட்டிகள் இருக்கும்.
நேற்று முன்தினம் ரயில் புறப்பட்டபோது, முன்பகுதியில் இருந்த ஒரு பொதுப்பெட்டியில் பயணிகள் ஏற அனுமதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் பின்புற பொதுப்பெட்டிகளில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையில், அந்த பொதுப்பெட்டியின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு, CITU உடன் தொடர்புடைய டி.ஆர்.இ.யு தொழிற்சங்கத்தின் கொடி கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய பெட்டி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
பயணிகள் அந்த பெட்டியை திறக்குமாறு ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததுடன், ‘ரயில் மதாத்’ செயலியிலும் புகார் அளித்தனர். ஆனால் அந்த பெட்டி வாடகைக்கு விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், ரயில்வே ஊழியர்களுக்கு இலவச பயண அனுமதி இருந்தாலும், பொதுப்பெட்டியை முழுமையாக ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தனர். கூடுதல் பெட்டி இணைக்காமல் பயணிகளுக்கான பொதுப்பெட்டியை பயன்படுத்தியதால், பலர் ஸ்லீப்பர் பெட்டிகளிலும், படிகளில் தொங்கியபடியும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
