பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சினிமா படப்பிடிப்புக்காக இயேசு கிறிஸ்து சிலை அமைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியில் அவ்வப்போது உரிய அனுமதி பெற்று திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதுமுகங்கள் நடிக்கும் ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக பள்ளியின் முகப்பு வாயிலில் இயேசு கிறிஸ்து சிலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சிலை அகற்றப்படாமல் இருந்ததால், நேற்று மாணவர் சேர்க்கைக்காக பள்ளிக்கு வந்த பெற்றோர் குழப்பமடைந்தனர். பள்ளி நுழைவாயிலில் சிலை இருந்ததால், இது அரசு பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என சந்தேகமடைந்த அவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த Hindu Munnani நிர்வாகிகள் பள்ளிக்கு வந்து, பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த நிர்வாகத்தினர், நகராட்சியின் அனுமதியுடன் பள்ளியில் ஷூட்டிங் நடத்தப்பட்டதாகவும், படப்பிடிப்புக்காகவே சிலை வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், சிலையை அகற்றும்படி படக்குழுவினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
இதையடுத்து சிலை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் நந்தகுமார் கூறுகையில், பள்ளி திறக்கும் நேரத்தில் படப்பிடிப்பு நடத்துவது மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும், பள்ளியில் ஷூட்டிங் நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
