அதிக மின் பயன்பாடே மின்வெட்டுக்கு காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
சென்னை: அதிகப்படியான மின் பயன்பாடு காரணமாகவே மின்வெட்டு ஏற்படுகிறது என மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 25) செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தமிழகத்தில் 14.22 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடன் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்” என்றார்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பேசிய அவர், “மேக்கேதாட்டு அணை கட்டப்படக் கூடாது என்பதே தவெக அரசின் நிலைப்பாடு. அதற்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
மின்துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அவர் கூறுகையில், “மின்கம்பம் உள்ளிட்ட பல பணிகளில் கடந்த காலங்களில் டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன. சிலர் மட்டுமே பயன்பெறும் வகையில் டெண்டர்கள் வழங்கப்பட்டன.
இந்த நடைமுறை மாற்றப்பட்டு, தகுதியான அனைவருக்கும் வெளிப்படையான முறையில் டெண்டர்கள் ஒதுக்கப்படும்” என்றார்.
மின்வெட்டு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், “அதிகப்படியான மின் பயன்பாடே மின்வெட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
கோவை சிறுமி கொலை வழக்கு குறித்து பேசிய அவர், “இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பனையை தடுக்கவும், தேவையற்ற டாஸ்மாக் கடைகளை மூடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “கட்சி தலைமை மீதான அதிருப்தியால் அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்கின்றனர்.
குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை. அவர்கள் ராஜினாமா செய்து கட்சியில் இணைவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.
