ஈரான் போர் நிறுத்த பேச்சு; சீன அதிபரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்
பெய்ஜிங்: அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்த நாடாக செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பாகிஸ்தானில் இரு நாடுகளின் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டாமல் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட ஆலோசனைகளுக்காக நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், “மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருகிறது.
இரு நாடுகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, பனிப்போர் மனநிலையிலிருந்து உலகத்தை வெளியே கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் சீனா தொடர்ந்து அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “உலகம் தற்போது மிகவும் நெருக்கடியான சூழலை கடந்து வருகிறது.
இப்போது நிலைமை சீராகி வருகிறது. அமைதியை நிலைநிறுத்த சீனா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்கா தொடர்ந்து தனது நிலைப்பாடுகளை மாற்றி வருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை நிறுத்த பல நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
