“தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு” – நயினார் நாகேந்திரன் தாக்கு
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொண்டாமுத்தூர் பகுதியில் இன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நயினார் நாகேந்திரன், “கோவையில் பட்டப்பகலில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த துணிகரச் செயலை தமிழக பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
“முன்பு இரவு நேரங்களில் நடைபெற்ற குற்றங்கள், தற்போது பட்டப்பகலிலேயே நடைபெறும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்துள்ளது.
இதன் மூலம் தமிழக காவல்துறை எந்த அளவுக்கு செயலிழந்து உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது” என்று அவர் குற்றம்சாட்டினார்.
அதேபோல், “ஆளும் தவெக அரசு உடனடியாக காவல்துறையை முடுக்கிவிட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கோவையில் சில நாட்களுக்கு முன் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
