காலை உணவு திட்டம் மேம்படுத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
சென்னை: “பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் மேலும் மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆறு தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறைகளில் கதவு மற்றும் தண்ணீர் வசதி, பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை, உயர்தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள், சீருடைகள் மற்றும் இலவச பாடப்புத்தகங்கள் ஆகிய அனைத்தும் தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “வெயிலின் தாக்கம் தொடர்பாக வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பிறகு, பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
“மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பும் நம்பிக்கையும் மிகவும் முக்கியம். அனைத்து தரப்பினரின் பிரச்னைகளும் சிறப்பு குறைதீர் முகாம்கள் மூலம் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
ஓய்வூதியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
காலை உணவு திட்டம் குறித்து பேசுகையில், “தரமற்ற உணவு வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க தேவையான மாற்றங்கள் செய்யப்படும். அவசியமெனில் உணவு பட்டியலிலும் மாற்றம் கொண்டு வரப்படும்” என்றார்.
மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு தொடர்பான இலவச தொலைபேசி எண்கள் அனைத்து பாடப்புத்தகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “ஜாதி மற்றும் சமயம் சார்ந்த அடையாளங்களுடன் எந்த நடவடிக்கைகளும் பள்ளிகளில் நடைபெற அனுமதிக்கப்பட மாட்டாது” என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியாக கூறினார்.
