புதுடில்லி: “கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உரங்களின் விலை உயர்ந்துள்ளது. எரிபொருள், உரங்கள் மற்றும் அன்னிய செலாவணி ஆகியவற்றில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தின. சுமார் ஒரு மாத காலமாக மோதல் நீடித்த நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்த மோதலின் பின்னணியில், சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை ஈரான் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 7 ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் மற்றும் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் 37வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை மிகவும் முக்கியமானது. அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றார்.
மேலும், “எரிபொருள், உரம் மற்றும் அன்னிய செலாவணி ஆகிய துறைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கச்சா எண்ணெய் விலை உயர்வு தற்போதைய சவாலின் ஒரு பகுதி மட்டுமே.
எரிபொருளைத் தவிர, உரங்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை வேகமாக உயர்வதும் வெளிநாட்டு சந்தையில் இந்தியாவுக்கு சவால்களை உருவாக்குகிறது” என்று தெரிவித்தார்.
“ஈரான் – அமெரிக்கா போர் என்பது வெறும் புவிசார் அரசியல் பிரச்னை மட்டுமல்ல. இதனால் எரிபொருள் செலவு உயர்வு, சரக்கு போக்குவரத்து தாமதம், கப்பல் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி பொருட்களுக்கு தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் உருவாகும்” என்றும் அவர் கூறினார்.
இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய அவர், “நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் இன்னும் வலுவாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக நாட்டின் சாதனைகளை மறைத்து அவநம்பிக்கை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.8.1 லட்சம் கோடி நிலுவைத் தொகையை பொதுத்துறை நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஜி.எஸ்.டி வசூல், உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் தனியார் முதலீடுகள் ஆகியவை இந்திய பொருளாதாரம் உறுதியாக இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள்” என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
