“நீங்கள்தான் அடுத்த பிரதமர்” – ராகுலுக்கு பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை
புதுடில்லி: “2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது” என்று அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர், பீஹாரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த முயற்சி பெரிய வெற்றியை பெறவில்லை.
தற்போது அவர் பீஹாரின் பாட்னா அருகே உள்ள ‘பீஹார் நவ்நிர்மான் ஆசிரமத்தில்’ தங்கி இருந்து வருகிறார். அடுத்த சட்டசபை தேர்தல் வரை அங்கிருந்தே அரசியல் ஆலோசனைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் முதலில் ஆலோசனை கூறியவர் பிரசாந்த் கிஷோர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தனது தேர்தல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ வாயிலாகவும் ராகுல் காந்திக்கு அரசியல் வியூக ஆலோசனைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத்தை தோற்கடிக்க காங்கிரஸ் புதிய கூட்டணி அமைப்பை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் உள்ள கூட்டணியை முறித்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக 2029 லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தர பிரதேசத்தில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், அதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள இந்த ஆலோசனைகள் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை முழுமையாக பின்பற்றி கூட்டணி அமைத்தால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இதை ராகுல் காந்திக்கு யார் விளக்குவது?” என்ற குழப்பத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
