மேற்கு வங்கத்தில் பாஜ பலம் 208 ஆக உயர்வு; பால்டா தொகுதியில் அமோக வெற்றி
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பால்டா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாஜ வேட்பாளர் தேபாங்ஷீ பாண்டா ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பால்டா தொகுதியில் மட்டும் மே 21ஆம் தேதி மறு தேர்தல் நடத்தப்படும் என்றும், மே 24ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜ 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பால்டா தொகுதியில் பாஜ சார்பில் தேபாங்ஷீ பாண்டா போட்டியிட்டார். அவரை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ஜஹாங்கீர் கான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, போட்டியில் இருந்து விலகுவதாக ஜஹாங்கீர் கான் அறிவித்தார்.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜ வேட்பாளர் தேபாங்ஷீ பாண்டா தொடர்ந்து முன்னிலை வகித்தார். இறுதியில் அவர் 1,49,666 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 1,09,021 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குர்மி 40,645 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் 10,084 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார். போட்டியில் இருந்து விலகிய திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானுக்கு 7,783 ஓட்டுகள் பதிவாகியிருந்தன.
பால்டா தொகுதியில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் மேற்கு வங்க சட்டசபையில் பாஜவின் பலம் 208 ஆக உயர்ந்துள்ளது.
