உபியில் 31,328 வக்ப் சொத்து பதிவுகள் ரத்து: யோகி அரசு அதிரடி
Uttar Pradesh மாநிலத்தில், வக்ப் வாரிய சொத்துகள் தொடர்பான ஆவணங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 31,328 சொத்து பதிவுகளை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
வக்ப் சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பான சட்டம் கடந்த ஆண்டு இறுதியில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள வக்ப் சொத்துகளை பதிவு செய்வதற்காக மத்திய அரசு UMEED Portal என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த இணையதளத்தில், ஆறு மாதங்களுக்குள் வக்ப் சொத்துகளின் முழுமையான விவரங்கள் பதிவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பதிவு செய்யப்படாத சொத்துகள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும், சொத்துகளின் நீளம், அகலம், புவிசார் குறிச்சொற்கள் மற்றும் நில விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த பதிவேற்ற கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை Supreme Court of India நிராகரித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் பதிவேற்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, Yogi Adityanath தலைமையிலான அரசின் கீழ், உத்தர பிரதேசத்தில் மொத்தம் 1,18,302 வக்ப் சொத்துகள் ஆவணப்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து, இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்களை வருவாய் துறை அதிகாரிகள் நில ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தனர்.
அப்போது, சில சொத்துகளின் ‘கஸ்ரா’ எனப்படும் நிலப் புல எண்கள் மற்றும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட விவரங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து, 31,328 வக்ப் சொத்துகளின் ஆன்லைன் பதிவுகளை உத்தர பிரதேச அரசு ரத்து செய்தது. மேலும், அந்த சொத்துகளுடன் தொடர்புடைய 31,192 வக்ப் கோரிக்கைகளும் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
