போதை வழக்கில் கைதானவர்கள் ஜாமினில் வரக்கூடாது; போலீசாருக்கு டிஜிபி உத்தரவு
மதுரை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் உடனடியாக ஜாமினில் வெளியே வர முடியாத வகையில், 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகளவில் பேசுபொருளாக இருந்தது. தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த சிறப்பு படையை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் எந்த வகையிலும் போதைப்பொருள் பயன்பாடு இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதால், இந்த வழக்குகள் தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதில், போதைப்பொருள் பயன்படுத்தும் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என்றும், தன்னார்வ அமைப்புகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து போதை மறுவாழ்வு மற்றும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளை கண்டறிந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்குகளில் 180 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகள் ஜாமினில் வெளியே வர முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார்.
அதேபோல், ரவுடிகளை கட்டுப்படுத்த அனைத்து பிரிவு போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி வழக்கு தொடரப்பட்டால் விசாரணை அதிகாரிகள் தாமதமின்றி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரவுடிகள் தொடர்பான வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், குற்றங்களின் மூலம் சம்பாதிக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்சோ வழக்குகளை நீதிமன்றத்தில் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும், 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை உறுதி செய்யவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
