விஜய் கூட்டணி ஆட்சிக்கு 6 மாதம் அவகாசம்: வைகோ கருத்து
மதுரை: முதல்வர் விஜய்யின் கூட்டணி ஆட்சி எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்; அதற்காக 6 மாதங்கள் அவகாசம் கொடுப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய அரசின் அழுத்தத்திற்கு முதல்வர் விஜய் அடிபணியக் கூடாது. எந்த சூழலிலும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டாம் என முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மேலும், “முதல்வர் விஜய்யின் கூட்டணி ஆட்சி எப்படி இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. சில மாதங்கள் காத்திருந்து அதன் செயல்பாடுகளை பார்க்க வேண்டும்” என்றும் கூறினார்.
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், விவசாயிகளுடன் இணைந்து கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.
அதேபோல், “இதுவரை அதிகார அனுபவம் இல்லாத சில தவெக எம்.எல்.ஏ.க்கள் மேற்கொள்ளும் செயல்களை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
திருமாவளவனை அதிகாரத்தில் பங்கேற்க அழைப்பதற்கு பின்னால் எந்த யூகத்தையும் கற்பிக்க விரும்பவில்லை என கூறிய வைகோ, “தவெக அரசுக்கு ஆதரவளித்து காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இதனால் இது கூட்டணி அரசாக மாறியுள்ளது. கடந்த 15 நாட்களாக அரசியல் வட்டாரத்தில் இதுகுறித்து குழப்பம் நிலவி வந்தது” என்றார்.
திமுக – அதிமுக கூட்டணி அரசு அமைப்பது குறித்து திரைமறைவில் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், “இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க திமுக, திரிணமுல் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. திமுக தனது மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ளது” என்றும் கூறினார்.
மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்த போதும் அதை ஏற்கவில்லை என்றும், எந்த பதவிக்கும் ஆசைப்பட மாட்டேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
