புதுடில்லி: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஸ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாங்கள் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. மேலும், தலைமை நீதிபதி இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடுவார் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் தற்போது முடிவு செய்துள்ளது.
