ஒரே நாளில் 274 பேர்; எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து புதிய உலக சாதனை
காத்மாண்டு: உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 மலையேற்ற வீரர்கள் அடைந்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
நேபாளம் – திபெத் எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்திலிருந்து 29,032 அடி உயரத்தில் உள்ளது. உலகின் மிக உயரமான இந்த சிகரத்தை அடைவது மிகவும் கடினமான சவாலாக கருதப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தின் தெற்குப் பாதை வழியாக மலையேற்றத்தில் ஈடுபட்ட வீரர்கள், சாதகமான வானிலையை பயன்படுத்தி ஒரே நேரத்தில் சிகரத்தை நோக்கி பயணித்தனர். இதில் 3 இந்தியர்கள் உட்பட மொத்தம் 274 பேர் வெற்றிகரமாக எவரெஸ்ட் உச்சியை அடைந்தனர்.
ஒரே நாளில் இத்தனை பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது இதுவே முதல் முறை என நேபாள மலையேற்ற ஆப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஒரே நாளில் 223 பேர் சிகரத்தை அடைந்ததே சாதனையாக இருந்தது.
இந்த ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கத்தில், எவரெஸ்ட் பாதையில் பெரிய அளவிலான பனிப்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவியதால் மலையேற்றம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் சிகரத்தின் கீழ் அமைந்திருந்த முகாம்களில் வீரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பின்னர் வானிலை சீராகி, பனிப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் குறைந்ததால், காத்திருந்த வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மலையேற்றத்தை தொடங்கினர். இதில் நேபாளத்தைச் சேர்ந்த 150 வழிகாட்டிகள் உட்பட 274 பேர் வெற்றிகரமாக எவரெஸ்ட் உச்சியை அடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
