முதல்வர் அறையில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ; இணையத்தில் வைரலாகி சர்ச்சை
சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்த மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் எடுத்த வீடியோ ரீல்ஸாக சமூக வலைதளங்களில் வெளியானது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், தினமும் துறை வாரியான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பினர் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது மாற்றுத் திறனாளிகளின் தற்போதைய நிலை, தேவைகள் மற்றும் அரசு சார்பான கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மாற்றுத் திறனாளிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுனிதா சதாசிவம், தண்டுவட பாதிப்படைந்தோர் சங்க நிறுவனர் ஞானபாரதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் மற்றும் ஐஐடி சென்னை அணுகல் தன்மை ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ஹேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ பின்னர் ரீல்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. முதலில் இந்த வீடியோவை தமிழக அரசு அதிகாரி ஒருவர் பதிவு செய்து வெளியிட்டதாக தகவல்கள் பரவின.
ஆனால் பின்னர், இந்த வீடியோவை அரசு அதிகாரி எடுக்கவில்லை என்றும், கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த சிம்மச்சந்திரன் என்பவரே செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் என்றும் தெரியவந்தது.
ஏற்கனவே திமுக தரப்பில் “இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சி” என விஜய் அரசை விமர்சித்து வரும் சூழலில், முதல்வர் அறையிலேயே ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
