நியூயார்க்: “ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதும், கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என ஐநாவில் இந்தியா தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் தாக்கமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நிலவி வருகிறது.
இந்நிலையில், ஐநாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் உரையாற்றினார்.
அப்போது, “ஹார்முஸ் பகுதியில் வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது, பொதுமக்கள் மற்றும் கப்பலில் பணிபுரிபவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை தடுப்பது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த விவகாரத்தில் சர்வதேச சட்டங்கள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய நடவடிக்கைகள் அவசியம்” என்றும் இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் குறிப்பிட்டார்.
