“அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம்” – நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவி பெற ரூ.100 கோடி வரை பேரம் பேசப்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, “தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளே எங்கள் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம். கருத்து வேறுபாடுகள் தேர்தலில் எதிரொலித்ததால் இண்டி கூட்டணி தோல்வியடைந்தது” என்று கூறினார்.
மேலும், “புதுச்சேரி மக்கள் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் எங்கள் கையில் இருந்த வாய்ப்பை நாங்களே இழந்துவிட்டோம்” என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசிய அவர், “தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததற்கு நாங்கள் ஆதரவு அளித்ததும் ஒரு காரணம். அமைச்சரவை இடங்கள், உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட விஷயங்களில் காங்கிரஸ் மற்றும் தவெக இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது” என்றார்.
“தமிழகத்தில் விஜயின் முகத்துக்காக மட்டும் நாங்கள் கூட்டணியை முறிக்கவில்லை. கூட்டணி அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவது சாதாரணம்” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு தாமதம் குறித்து பேசும்போது, “அமைச்சர் பதவிக்காக முதலில் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டது. அது சரியாக அமையாததால் தற்போது ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை பேசப்படுவதாக தகவல்கள் வருகின்றன” என்று குற்றம்சாட்டினார்.
“இதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது” என்றும் தெரிவித்தார்.
மேலும், “முதல்வர் ரங்கசாமி மவுனமாக இருக்காமல், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.
