பெங்களூரு: “எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படும் சேவையே உண்மையான சேவை” என்று குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழாவும், குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் 70வது பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட், காமன்வெல்த் செயலகத்தின் மூத்த இயக்குநர் சுரேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட், “குழந்தைகள் கல்வி முதல் நதிகளுக்கு புத்துயிர் அளித்தல், ரசாயனமற்ற விவசாயம் மற்றும் பேரிடர் நிவாரணம் வரை ‘தி ஆர்ட் ஆஃப் லிவிங்’ உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் அமைப்பாக வளர்ந்துள்ளது” என்று பாராட்டினார்.
மேலும், “யோகா, தியானம், பிராணாயாமம் மற்றும் குறிப்பாக சுதர்ஷன் கிரியா மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் புதிய ஆற்றலையும் நேர்மறை சிந்தனையையும் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உருவாக்கியுள்ளார்” என்றும் கூறினார்.
“பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்களை மன அழுத்தமற்ற மற்றும் வன்முறை இல்லாத வாழ்க்கை நோக்கி வழிநடத்தியுள்ளார்” என்றும் கவர்னர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், “ஜார்க்கண்ட் மாநில மக்களின் சார்பாக குருஜிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் இந்த மண் குருஜி போன்ற மகான்களை உருவாக்கியுள்ளது” என்றார்.
“தியானம் என்பது குகைகளிலும் இமயமலையிலும் மட்டும் செய்யப்படுவது என்று மக்கள் நினைத்திருந்த நிலையில், அதை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு வந்தவர் குருஜி” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், “எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படும் சேவையே உண்மையான சேவை” என்று தெரிவித்தார்.
மேலும், “ஆன்மாவுக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் அதே உணர்வு ஆற்றல் ஒவ்வொருவரின் உள்ளேயும் இருக்கிறது. கடல் நீர் ஒன்றாக இருந்தாலும் அது பல அலைகளாக வெளிப்படுவது போல, நாம் அனைவரும் ஒரே உணர்வின் வெளிப்பாடுகள்” என்றும் கூறினார்.
“அந்த உணர்வில் லயித்து அமைதி பெறுவதுதான் தியானம். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான உணர்வின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உரையாற்றினார்.
