மாலே: Maldives நாட்டில் கடலுக்கு அடியில் உள்ள குகையை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட Italy நாட்டை சேர்ந்த 5 நீச்சல் வீரர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவு தலைநகர் மாலேயில் இருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாவூ அட்டோல் பகுதியில், 50 முதல் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள கடலடிக் குகைகளை ஆய்வு செய்ய இத்தாலியை சேர்ந்த குழுவினர் சென்றிருந்தனர்.
அவர்கள் நீருக்கடியில் மூழ்கி ஆய்வு மேற்கொண்ட பின்னர் நீண்ட நேரமாக மேற்பரப்பிற்கு திரும்பவில்லை. இதையடுத்து அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், ஆய்வில் ஈடுபட்டிருந்த 5 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக ரோமில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 4 பேர் University of Genoa பல்கலைக்கழக குழுவை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. அவர்களில் சூழலியல் பேராசிரியர் Monica Montefalcone, அவரது மகள் மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ஒரு சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மோசமான வானிலை காரணமாக மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை சீரானதும் மீட்பு பணி மீண்டும் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
