புதுடில்லி: தவெக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற உள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு பெறுவது தமிழக மக்களால் ஏற்கப்படாது என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதாக கூறினார். அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், தமிழக மக்கள் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு புதிய அரசியல் வரலாறு தமிழகத்தில் எழுதப்பட்டு வருவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.
59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பிடிப்பது உணர்ச்சிபூர்வமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “36 சதவீத கமிஷன் அரசியலிலிருந்து தமிழகத்தை ஊழல் இல்லாத ஆட்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். புதிய அரசு, புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது” என்றும் மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
