சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. ஒரு தரப்பில் எடப்பாடி கே. பழனிசாமி செயல்பட்டு வருகிறார். மற்றொரு தரப்பில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இரு தரப்பினரும் சட்டமன்ற குழு தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு அணிகளும் சபாநாயகரிடம் தனித்தனியாக கடிதங்கள் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் தற்போது ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுகவினர் இரண்டு தரப்பாக வந்து மனுக்கள் அளித்துள்ளனர். அதிமுக கொறடா நியமன விவகாரம் பரிசீலனையில் உள்ளது. மனுக்கள் அளித்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ளன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
