பெங்களூரு: Karnataka மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்டிருந்த தடையை, காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு நீக்கியுள்ளது.
இந்த விவகாரம் கடந்த 2021ஆம் ஆண்டு Udupiயில் உள்ள அரசு பி.யு. கல்லூரியில் தொடங்கியது. அப்போது ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியரை கல்லூரிக்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியரும், பல முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி நிர்வாகம், “கல்லூரி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வரலாம்; ஆனால் வகுப்பறையில் சீருடை மட்டும் அணிய வேண்டும்” என தெரிவித்திருந்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த மாணவியர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, சில ஹிந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்புகளுக்கு வந்ததால் பிரச்சினை பெரிதாகியது. பின்னர் அப்போதைய Bharatiya Janata Party அரசு, கல்வி நிறுவனங்களில் சீருடை மட்டும் கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தது. அதன்படி மத அடையாள ஆடைகள் அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை உறுதி செய்தது.
இந்நிலையில், கர்நாடக பள்ளிக் கல்வித்துறை தற்போது புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில், “கர்நாடக கல்வி சட்டம் 1983ன் கீழ், 2022ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஹிஜாப் தடை உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிந்து வரலாம் என்றும், பூணூல், சிவதாரா, ருத்ராட்சம் போன்ற மத அடையாளங்களையும் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மத அடையாளங்களை அணிந்துவரும் மாணவ – மாணவியரை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுக்கக்கூடாது என்றும், எந்த மாணவரையும் மத சின்னங்களை அணியவோ அல்லது அகற்றவோ கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
