15,000 பாகிஸ்தான் தொழிலாளர்களை வெளியேற்றும் யு.ஏ.இ? பரபரப்பு தகவல்
துபாய்: United Arab Emirates அரசு, தங்கள் நாட்டில் பணிபுரிந்து வரும் பாகிஸ்தான் தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 15,000 தொழிலாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Iran மற்றும் United States இடையே பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர், மார்ச் மாத இறுதியில் தீவிரமடைந்தது. இந்த மோதலின் போது, அமெரிக்காவுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட யு.ஏ.இ. உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், யு.ஏ.இ. மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்பதால், யு.ஏ.இ. அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், யு.ஏ.இ.யில் சன்னி முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த சில ஷியா முஸ்லிம்கள் ஈரானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை தொடர்ந்து, யு.ஏ.இ. அரசு பாகிஸ்தான் தொழிலாளர்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக The New York Times செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின்படி, கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த சுமார் ரூ.35,000 கோடி கடனையும் யு.ஏ.இ. கடந்த மாதம் திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாகிஸ்தானின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் முக்கிய பங்காக இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, யு.ஏ.இ.யில் வசித்து வரும் சில ஷியா பிரிவு பாகிஸ்தானியர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டு, சில நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின் நாடு கடத்தப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடியோரின் பட்டியலில் சுமார் 15,000 தொழிலாளர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
