ஆளுநரை மீண்டும் சந்திக்கும் விஜய்: ஆட்சியமைப்பில் பரபரப்பு
தமிழக அரசியலில் ஆட்சியமைப்பது தொடர்பான பரபரப்பான சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மாலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை மீண்டும் சந்திக்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. இந்தக் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளும் தனித்தனியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு சந்திப்பதற்காக விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களாக விஜய் ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆதரவை மட்டுமே அடிப்படையாக கொண்டு தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறாரா அல்லது 118 எம்எல்ஏக்களின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளாரா என்பது குறித்து ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகே தெளிவாகும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
