சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில், மொத்தம் ரூ.1,212 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி Archana Patnaik தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல்துறை பார்வையாளர்கள் மற்றும் 150 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் 83,875 போலீசார் மற்றும் 40,427 பிற பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மத்திய ஆயுத பாதுகாப்பு படையிலிருந்து 300 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
அனைத்து தொகுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் மூலம் இதுவரை ரூ.169 கோடி ரொக்கம், ரூ.2.95 கோடி மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் ரூ.82.7 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரூ.650 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களும், வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்ட ரூ.306 கோடி மதிப்பிலான இலவச பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வனைத்தையும் சேர்த்து மொத்தமாக ரூ.1,212 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதில் ரூ.495 கோடி மதிப்பிலான பொருட்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
