புதுடில்லி: கல்பாக்கம் அணு உலையில் அமைக்கப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மாதிரி அதிவேக ஈனுலை சமீபத்தில் வினைபுரிய தொடங்கியது என்பது நாட்டின் பெருமைமிகு சாதனை என ராஜ்யசபா தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலை, ஏப்ரல் 6ம் தேதி இரவு ‘கிரிடிக்காலிட்டி’ எனப்படும் வினைபுரியும் நிலையை எட்டியது. இது முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த சாதனையை ராஜ்யசபாவில் அவர் பாராட்டியபோது, இது நாடே பெருமைப்பட வேண்டிய ஒரு முக்கிய முன்னேற்றம் எனக் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி துறையின் பல பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட 20 ஆண்டுகால முயற்சியின் விளைவாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த முன்னேற்றத்தின் மூலம் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நாடு முன்னேறியுள்ளது என்றும் அவர் கூறினார். சாதாரண அணு உலைகளை விட, இந்த அதிவேக ஈனுலை அதிக எரிபொருள் உருவாக்கும் திறன் கொண்டதாகும்.
இச்சாதனையால், மேம்பட்ட அணு தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளதாகவும், இதில் பங்காற்றிய அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கும் ராஜ்யசபா சார்பில் பாராட்டுகள் தெரிவித்தார்.
