தூத்துக்குடி: “த.வெ.க.வில் அனைத்து பதவிகளும் பணம் வாங்கி வழங்கப்படுகின்றன” என, அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த அஜிதா ஆக்னஸ் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அவர் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் தொடங்கிய மக்கள் இயக்கம் ஆரம்பித்த நாளிலிருந்து தங்கள் குடும்பம் அதில் செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.
2024ல் த.வெ.க. தொடங்கிய பின்னரும் கட்சிக்காக உண்மையாக உழைத்தபோதும், தமக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றும், உழைத்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
விஜய் கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்துடன் பழகியவர் என்பதால், அந்த நெருக்கத்தின் அடிப்படையில் அவரது காரை மறித்து தமது குறைகளை சொல்ல முயன்றதாகவும், ஆனால் கட்சித் தலைவராக இருந்த அவர் தமது பிரச்சினையை கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தம்மை கடுமையாக திட்டி, வேறு கட்சிக்கு செல்லும்படி கூறியதாகவும் குற்றம்சாட்டினார். த.வெ.க.வில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றும் தெரிவித்தார்.
கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளுக்கும் பணம் பெறப்பட்டதாகவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் பணம் வாங்கப்பட்டதாகவும் கூறினார். பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
தமக்கு அடிப்படை மரியாதை கூட வழங்கப்படவில்லை என்பதால், அந்த கட்சியில் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்து தி.மு.க.வில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
