கோவை: “தமிழக முதல்வர் ஸ்டாலின் நெருப்புடன் விளையாடுகிறார்” என பா.ஜ.வைச் சேர்ந்த டில்லி முதல்வர் ரேகா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் ‘பிக்கி புளோ மகளிர் அமைப்பு’ சார்பில் கோவையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார் என்றும், இந்தியா எனும் பெரும் நெருப்புடன் விளையாடுகிறார் என்றும் விமர்சித்தார்.
பார்லிமென்டில் முழு பெரும்பான்மையுடன் அந்த மசோதா நிறைவேறும் என்றும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகப்பெரிய சமூக சீர்திருத்தமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இது பெண்களுக்கு முடிவெடுக்கும் அரசியல் அதிகாரத்தை வழங்கி, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.
மேலும், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் வலுவான பொருளாதார அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படுவதுடன், ரயில்வே துறை நவீனப்படுத்தப்பட்டு, விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் மூலம் சிறிய நகரங்களிலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுகிறது என்றும், வேகமாக வளர்ந்து வரும் கோவை போன்ற தொழில் நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் வராதது வருத்தமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
