சென்னை: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பார்லியில் நிறைவேற்றப்பட இருப்பதற்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்றும், லோக்சபாவில் எம்பிக்களின் எண்ணிக்கையை 543 இலிருந்து 850 ஆக உயர்த்தும் நோக்கில் ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த மசோதா விரைவில் தொடங்க உள்ள பார்லி சிறப்பு கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதே நேரத்தில், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனால் மொழி, கலாசாரம், மாநில உரிமைகள் போன்ற விஷயங்களில் தென் மாநிலங்களின் குரல் குறையும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து பின்பற்றிய மாநிலங்களுக்கு தண்டனை, பின்பற்றாத மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பது போன்ற நிலை உருவாகும் என்றும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் விகிதாசாரம் மாறுவது மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே தமிழகம் நிதிப்பகிர்வில் இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்திற்கு போதுமான நிதி மற்றும் திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் மக்கள் தொகை அடிப்படையிலான நிதி மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
இதனால் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் இந்த ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தற்போதைய நடைமுறை தொடர வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
