நியூயார்க்: நிலவை நோக்கிய அர்டெமிஸ் 2 திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், 10 நாட்கள் ஆய்வுப் பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள் இன்று அதிகாலை பாதுகாப்பாக பூமி திரும்பினர்.
சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் நிலவை நோக்கி சென்ற இந்த முக்கியமான பயணம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கடந்த 2ஆம் தேதி துவங்கியது. இந்த விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர்.
நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்த அவர்கள், நிலவுக்கு மிக அருகில் சுமார் 6,545 கிலோமீட்டர் தூரம் வரை சென்றனர். மேலும், இதுவரை மனிதர்கள் காணாத புதிய கோணங்களில் புகைப்படங்களை பதிவு செய்து பூமிக்கு அனுப்பினர்.
இந்த பயணத்தின் போது, அவர்கள் பூமியிலிருந்து அதிகபட்சமாக 4,06,778 கிலோமீட்டர் தூரம் சென்றனர். இதன் மூலம், 1970ஆம் ஆண்டு அப்பல்லோ 13 திட்டம் அமைத்த 4,00,171 கிலோமீட்டர் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தனர்.
நிலவைச் சுற்றி சுமார் ஏழு மணி நேரம் ஆராய்ச்சி மேற்கொண்ட அவர்கள், இரண்டு புதிய பிரகாசமான பள்ளங்களை கண்டறிந்து அவற்றுக்கு பெயரிடவும் செய்தனர்.
பயணத்தை வெற்றிகரமாக முடித்த விண்கலம், இன்று அதிகாலை அமெரிக்காவின் சான் டியாகோ அருகே உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த சாதனைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள அர்டெமிஸ் 3 திட்டத்தில் விண்கல இணைப்பு பயிற்சிகள் நடைபெற உள்ளன. 2028ஆம் ஆண்டு அர்டெமிஸ் 4 திட்டத்தின் மூலம் நிலவின் தென்பகுதியில் மனிதர்களை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
