திருவனந்தபுரம்:
கேரள சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இளம் வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் நடனமாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
இளம் வாக்காளர்களை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில், முதன்முறையாக ஓட்டளிக்க வருபவர்களுக்கு ‘அல்வா’ வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில், ஓட்டுச்சாவடிகளில் இருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு, ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல இலவச பயண சேவையை ‘ஊபர்’ நிறுவனம் வழங்க உள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இசை வீடியோவில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர், திருவனந்தபுரம் கலெக்டர் அனு குமாரி, உதவி கலெக்டர் சிவசக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் இசைக்குழுவுடன் இணைந்து கடற்கரை பகுதியில் நடனமாடியுள்ளனர்.
1 நிமிடம் 33 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், “இது உங்கள் ஓட்டு, நம் மாநிலத்திற்கு உங்கள் ஓட்டு தேவை… ஒரே ஒரு ஓட்டு ஆட்சியையே மாற்றக்கூடும், விதியையே மாற்றி எழுதக்கூடும்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கொச்சியில் சமீபத்தில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
