சென்னை: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தவெக தலைவர் Vijayக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, மத்திய உள்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தவறுதலாக மணிப்பூர் கவர்னரிடம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய், பெரம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டு பிரசாரம் மேற்கொண்டார். பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த பின், கொளத்தூர் பகுதியில் பிரசாரம் செய்ய சென்றபோது, கூட்டம் அதிகமாகி பதற்றமான சூழல் உருவானது.
இதனால் அவர் முழுமையாக உரையாற்ற முடியாமல், வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த அடுத்த கட்ட பிரசாரத்தையும் ரத்து செய்து திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலைக்கு சென்னை போலீசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என தவெக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அந்த கடிதம் முன்னாள் உள்துறை செயலரும் தற்போதைய மணிப்பூர் கவர்னருமான Ajay Bhallaவுக்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தற்போது உள்துறை செயலராக Govind Mohan உள்ள நிலையில், பழைய பதவியில் இருந்தவருக்கு கடிதம் அனுப்பிய தவறு சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடிதத்தில், “விஜய்க்கு வழங்கப்பட்ட ‘Y’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. போலீசார் போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை செய்யாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “பாதுகாப்பு குறைபாடு காரணமாக பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய உள்துறை தலையிட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், பின்னர் சில காரணங்களால் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், சமீபத்தில் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
