சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் நாள் தேர்தல் பிரசாரத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் பாதியிலேயே நிறுத்தினார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பெரம்பூரிலும், அதன் பின் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் இரவு 7:00 மணி வரை பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே பெரம்பூரில் மதியம் 1:30 மணியளவில் விஜய் பிரசாரம் தொடங்கினார். அதேபோல், கொளத்தூரிலும் மாலை 4:30 மணியளவில் பிரசாரம் நடைபெற்றது.
கொளத்தூரில் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டதால், திட்டமிட்டபடி விஜயால் உரையாற்ற முடியவில்லை. கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ச்சி சீராக நடைபெறவில்லை.
மேலும், வில்லிவாக்கத்தில் காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று கூறி, அங்கு நடைபெற இருந்த பிரசாரத்தை விஜய் ரத்து செய்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், விஜய் சென்ற இடங்களில் மக்கள் தன்னிச்சையாக அதிக அளவில் திரண்டதாகவும், ஆனால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், விஜய் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது என அவர் விளக்கமளித்தார்.
