இஸ்லாமாபாத்: ஈரான் போர் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், இரு நாட்கள் நடைபெற இருந்த உச்சி மாநாடு ஒரே நாளில் முடிவுக்கு வந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையை சமாளிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்து, இஸ்லாமாபாதில் இரு நாள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இதில் துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆனால், மத்தியஸ்தம் செய்வதற்கான தெளிவான திட்டம் அல்லது செயல்திட்டம் பாகிஸ்தான் முன்வைக்காததால், மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக, ஈரான் கோரிய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு எந்த நாடும் உறுதியான பதில் அளிக்காதது காரணமாக, மாநாடு எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.
இதனால், இரண்டாம் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், சவுதி அரேபியா மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றனர்.
