ஹமீர்பூர்: அடுத்த ஆண்டு பணிநிறைவு செய்யும் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
முப்படைகளில் இளைஞர்களை நான்கு ஆண்டுகள் தற்காலிகமாக பணியமர்த்தும் Agnipath Scheme திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.
இந்த திட்டத்தின் படி, நான்கு ஆண்டு சேவை முடிவில் சிறப்பாக செயல்படும் 25 சதவீத வீரர்கள் நிரந்தரமாக்கப்படுவர். மீதமுள்ளவர்கள் பணியிலிருந்து விலகுவார்கள். இவர்களுக்கு மறுவாழ்வு வாய்ப்பாக பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹிமாச்சலப் பிரதேச ராணுவ வீரர் நலத்துறையின் முன்னாள் இயக்குநர் பிரிகேடியர் Madan Sheel Sharma தெரிவித்ததாவது: 2027ஆம் ஆண்டில் சேவையை நிறைவு செய்யும் அக்னி வீரர்களின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு, பல்வேறு அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வன காவலர், சுரங்க காவலர், கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர், குதிரைப்படை வீரர், சிறை காவலர், சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பணிகளில் இந்த இடஒதுக்கீட்டை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள், அக்னி வீரர்களுக்கு போலீஸ் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளன
