திருத்தணி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் எதிராக நாங்களே ஒரே எதிர்க்கட்சி என தெரிவித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோவிலில் வேல் ஏந்தி சாமி தரிசனம் செய்த சீமான், அதனைத் தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “மற்றவர்களுக்கு இது தேர்தல் ஆக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இது ஒரு போர். நல்ல ஆட்சியை நோக்கி தான் எங்கள் பிரசாரம் இருக்கும்” என்றார்.
மேலும், “உலகின் தலைசிறந்த நாடாக என் நாட்டை மாற்றுவேன். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நல்ல ஆட்சியை வழங்குவோம். பூமியின் சொர்க்கமாக என் தாய்நாட்டை மாற்றுவேன்” எனக் கூறினார்.
இன்றிலிருந்து ஏப்ரல் 21 வரை தொடர்ந்து 30 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த தேர்தலில் எல்லா கட்சிகளுக்கும் நாங்களே ஒரே எதிர்க்கட்சி. ஊழல் இல்லாத கட்சி எது? உண்மையான, நேர்மையான ஆட்சி எது? இலவசம் தராத கட்சி எது? ஓட்டுக்கு பணம் கொடுக்காத கட்சி எது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
“எல்லா கட்சிகளும் ஒருபக்கம் இருந்தால், அதற்கு எதிராக நாங்கள் நிற்கிறோம். இலவசம் என்பது ஒரு ஏமாற்று மற்றும் லஞ்சம். மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சிதான் அது. அதிலிருந்து மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம்” என சீமான் தெரிவித்தார்.
