புதுடில்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளை சரிசெய்யும் பணியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற ஒரு டிவி சேனல் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2004 முதல் 2010 வரை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகள் தொடர்பாக பெரிய பிரச்சினைகள் இருந்ததாக கூறினார். அப்போது நாட்டின் நலனை விட அரசியல் அதிகாரத்தை காக்கும் முயற்சியே முன்னிலை பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.
அந்த காலகட்டத்தில், ₹1,48,000 கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாகவும், அது எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையை ஏற்படுத்தும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தவறு என்று தெரிந்தும் அந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் விமர்சித்தார்.
மேலும், அந்த பத்திரங்களுக்கு 2020க்குப் பிறகு பணம் திருப்பிச் செலுத்தப்பட்டதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் பாஜ அரசு காங்கிரஸ் செய்த தவறுகளை சரிசெய்ய முயன்றுள்ளதாகவும் தெரிவித்தார். வட்டியுடன் சேர்த்து ₹3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை நாடு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
உலகளவில் குழப்பமான சூழ்நிலை நிலவினாலும், இந்தியா தனது வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். பிப்ரவரி 28 முதல் 23 நாட்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டில்லி மெட்ரோ முக்கிய வழித்தடங்கள் திறக்கப்பட்டன, கோட்டாவில் புதிய விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், வளைகுடா நாடுகள் முதல் ஐரோப்பா வரை, இந்தியா நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதாகவும், உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியையும் கொள்கைகளையும் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உலகளவில் போர்கள் மற்றும் குழப்பங்கள் நிலவினாலும், இந்தியா சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், பல நாடுகள் இந்தியாவின் முன்னேற்றத்தை பார்த்து ஆச்சரியப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
