ஜம்முவில் உள்ள பல்கலையில் முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் முகமது அலி ஜின்னா குறித்து பாடம் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
ஜம்மு காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஜம்மு பல்கலையில் முதுகலை அரசியல் அறிவியல் பாடத்தில் புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டன. அதில் ‘தேசமும் சிறுபான்மையினரும்’ என்ற பாடத்தில், நவீன இந்திய அரசியல் சிந்தனைகள் என்ற பகுதியில் ஜின்னா குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏபிவிபி அமைப்பினர் பல்கலை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். ஜின்னா தொடர்பான பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து பல்கலை நிர்வாகம் விளக்கம் அளிக்கையில், பல்கலை மானியக் குழு விதிகளின் படியே பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும், ஜின்னா மட்டுமின்றி விநாயக் தாமோதர் சாவர்க்கர், கோல்வால்கர், மஹாத்மா காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர் என கூறப்பட்டது.
ஜின்னா தொடர்பான பாடத்தை நீக்கினால், தேசிய தகுதி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
