புதுடில்லியில், உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்துள்ளதால், மாநிலங்களுக்கான வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை 20 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்காசியாவில் இஸ்ரேல்–ஈரான் போர் நீடித்து வந்ததால், ஆரம்பத்தில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு வழங்கப்பட்ட வணிக காஸ் விநியோகம் 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து, விநியோக நிலைமை மெல்ல சீராகியுள்ளது.
இதன் அடிப்படையில், வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் ஒதுக்கீட்டை கூடுதலாக 20 சதவீதம் உயர்த்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், வணிக காஸ் விநியோகம் தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த முடிவால் ஹோட்டல்கள், உணவகங்கள், தொழிற்துறை கேன்டீன்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் பயன்பெறும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தடையின்றி காஸ் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் ஒதுக்கீட்டை பெற விரும்பும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களில் பதிவு செய்திருக்க வேண்டும். குழாய் மூலம் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பித்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக காஸ் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தேவையற்ற பீதியில் முன்கூட்டியே காஸ் அல்லது எரிபொருள் சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
கள்ளச்சந்தை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 3500 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 1400 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்திய கப்பல்களில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
