துபாய்: மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தின் எதிரொலியாக, ஐக்கிய அரபு எமிரேட்சில் ரம்ஜான் பண்டிகை தொழுகைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரம்ஜான் மாதத்தின் முடிவை குறிக்கும் ஈத் அல் பித்ர் தொழுகைகள், யு.ஏ.இ.யில் வழக்கமாக பெரிய அளவில், திறந்தவெளி மைதானங்களில் நடைபெறுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போதைய பிராந்திய பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு, தொழுகைகளை திறந்தவெளியில் நடத்தாமல், மசூதிகளுக்குள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான பொது ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, வழக்கமாக திறந்த வெளி மைதானங்களில் நடைபெறும் பெரும் திரளான தொழுகைகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், மேற்காசிய நாடுகளான குவைத் மற்றும் கத்தாரும் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
