மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “நான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறேன்” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2025 டிசம்பர் 1ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அமல்படுத்தாததால், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, டிசம்பர் 3ஆம் தேதி விசாரணையில், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டு, மனுதாரர் உட்பட சிலருக்கு மலை உச்சிக்கு சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கவும், பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு டிசம்பர் 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
பின்னர், நீதிபதி சுவாமிநாதன், நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை மலை உச்சியில் 15 நிமிடம் அடையாள வழிபாடு செய்ய அனுமதிக்க பரிந்துரைத்தார்.
இதற்கிடையில், போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் ஆஜராகாததை நீதிபதி கண்டித்து, அவர்கள் மீது வாரண்ட் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தார்.
மேலும், கோயில் நிர்வாகம் பரிந்துரையை பரிசீலிக்க அவகாசம் கோரி, பின்னர் மேல்முறையீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்ட நிலையில், “நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு மரியாதை செலுத்துவது முக்கியம் என வலியுறுத்திய நீதிபதி, அதிகாரிகள் சட்டப்படி செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு ஏப்.8 வரை இடைக்காலத் தடை விதித்துள்ளதால், வழக்கு விசாரணை ஏப்.9க்கு ஒத்திவைக்கப்பட்டது.
